நான் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அனுப்பிய தகவல்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இரகசியமாக பெற்றுள்ளார் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் நேற்று 3 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்த அவர்,
”நான் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தில் வாக்குமூலம் அளித்தேன். சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராக இருந்தபோது தேசிய சேமிப்பு வங்கியில் வைத்திருந்த நிலையான வைப்புத்தொகையை திரும்பப் பெற்ற சம்பவம் தொடர்பாக ஏப்ரல் 10 நான் வெளியிட்ட ஊடக அறிக்கை தொடர்பான உண்மைகளை விசாரிக்க அழைக்கப்பட்டேன்.
நாளாந்தம் பல்வேறு நபர்கள் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு வரவழைக்கப்படுகிறார்கள். எனினும் நான் வரும்போது மாத்திரம் ஊடகங்களுக்கு ஏன் தெரியப்படுத்துகிறீர்கள் என ஆணைக் குழுவிடம் இன்று கேட்டேன்.
அத்துடன், ஆணைக்குழுவில் உள்ள ஆவணங்கள் வெளி நபர்களுக்கு காண்பிப்பதற்கும் நான் எதிர்ப்பு வெளியிட்டேன்.
ஏப்ரல் 11 ஆம் திகதி மட்டக்களப்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய உரையை நான் அவர்களுக்குக் காட்டினேன். அதில் நான் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அனுப்பிய பல உண்மை தகல்களை அவர் குறிப்பிட்டிருந்தார்.
அப்படியென்றால் கமிஷனின் கடிதங்கள் ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து எடுக்கப்படும் என்று அர்த்தமா? இந்த சூழ்நிலையில் அவருக்கு நீதி கிடைக்குமா என்று தெரியாததால், அவர் தனது வழக்கறிஞர்களுடன் கமிஷன் முன் முன்னிலையாகக வேண்டும் என்று நான் அவருக்குத் தெரிவித்தேன்.
கமிஷனுக்கு தெரிவிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து ஜனாதிபதி எப்படிப் பேச முடியும்? இந்தநாட்டில் மாகாண சபைகளும் மத்திய அரசாங்கமும் ஒதுக்கீட்டுச் சட்டத்தின்படி மட்டுமே பணத்தைச் செலவிட முடியும் என்று நான் ஆணையத்தின் முன் கூறினேன் என்றார்.